மனைவியைக்காத்து, கடாஉய்த்த பைம்புல் நிலைபேணி-எருமைக்கடாக்களைச் செலுத்தி யுழுத பசிய புல் நிற்கும் நிலையையுடைய நிலங்களைக் காத்து, ஊழ்ப்பவடு அடார்-சிறக்கும்படி குற்றம் பொருந்தாத வழக்கையுடையவர், ஐம்புலம் ஈர்த்தாரில் தலை-ஐம்புலங்களையும் வென்ற முனிவரினும் முதன்மையாவர். (க-து) இல்வாழ்க்கையை முறைப்படி நடத்தி வாழ்பவர் ஐம்புலமடக்கிய முனிவரினும் சிறந்தவர். (வி-ம்) ஐம்புலத்தோர் என்றது, தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்ற ஐந்து இடத்தாரை யுணர்த்தியது. நல்குரவோர்-வறுமையுடையவர். ஐம்புலத்தோரை யோம்பி நல்குர வோரையும் ஓம்பி என உம்மையும் உருபும் விரித்துக்கொள்க. தலைப்பட்ட என்பது ஐந்து பங்கில் ஒன்றாகத் தம் மிடத்துச் சேர்ந்த பொருளை யுணர்த்தியது. செம்பாகம், கூடுதல் குறைதலின்றிப் பிரித்த பாகம் என்பதை விளக்கியது. தன்னைப்போலவே தன் மனைவியும் உணவு உடை முதலியவற்றாற் சிறந்து வாழ வேண்டும் என்று கணவன் கருதி அப்பங்கில் தனக்கு மிகுதியாக வைக்காமல் அவளுக்கும் அதிற் பாதி யுதவிப்பேணவேண்டும் என்ற கருத்து விளங்க "செம்பாகம் நன் மனையைப்பேணி" என்றார். கடாவுய்த்த என்பது உழவு செய்த என்ற பொருளில் நின்றது. பைம் புல் நிலை என்பது, நன்னிலம் என்பதை யுணர்த்தியது. "புல் முளையாத பொட்டல்" என்று உலகில் உவர்த்தரையைக் கூறுவதும் அறிக. புல் முளைத்துத் தழைத்திருக்கும் நிலங்களே நன்செய்யாம், உழுத நிலங்களைக்காப்பதும் இல்வாழ்வான் கடமையாம் என்பதனால் "பைம்புனிலை பேணி" என்றார். வடு-குற்றம், அடார்-அடுக்காதவர்:குற்றம் சேராதவர் எனப் பொருள் பட்டது. செய்ந்நன்றி மறத்தல், பிறனில் விழைதல் போன்ற கொடிய குற்றங்கள் இல்லறத்தாருக்குச் சேரின் அவர் சிறப்படையார். அக்குற்றங்களின்றி வாழ்ந்தவரேமுனிவரினும் தலையாவார் என்பது கருத்து. ஈர்த்தார் என்பது ஐம்புலமும் தன்னையிழுக்க அவற்றின் வழியே சென்றுழலாமல் அப்புலங்களைத் தன் வசமாக இழுத்தவர் என்பதை விளக்கியது. ஈர்த்தல்-இழுத்தல். "ஐந்தவித்தான்" என்று வள்ளுவர் கூறியதன் பொருளும் அதுவே.
|