பக்கம் எண் :


66

(க-து) இல்வாழ்வான், ஐந்து குரவரைப் பேணித், தன்னைச் சார்ந்தவர்க்கு உணவு கொடுத்தாதரித்து, வருந்துவோர் கவலையை மாற்றி, முப்பத்திரண்டு தருமங்களில் தனக்கியன்ற சில தருமங்களைச் செய்து வாழவேண்டும்.குரவர் ஐவராவர், குரு, அரசன், அன்னை, தந்தை, தம்முன் ஆகிய இவர்.

(வி-ம்) குரவர்-பெரியார், இல்வாழ்வான் ஒருவன் தனக்குப் பெரியராகிய ஐவரையும் வணங்கிக் காப்பாற்றவேண்டும்; அவன் கடமையாம் அது. பைங்கூழ்-என்பது பசுமை+கூழ் இவ்விரண்டுஞ் சேர்ந்தது. பசுமை நிறத்தை யுணர்த்தாது நலத்தையுணர்த்திற்று, பைம்பொன் என்பதுபோல, கூழ்-உணவு. களைகண்-ஆதரவு. எனவே வந்தவர்க்கு ஆதரவாக இருந்து அவர்க்கு வேண்டும் உணவளித்தல் எனக்கொள்க. நை-வருந்து என்ற பொருளையுடைய முதனிலை, இதுநைந்த, நைகின்ற, நையும் என மூன்று காலத்தையும் உணர்த்தும் பொருளில் நின்றது. உளத்தர்-மனமுடையவர். வருந்து மனத்தவரை ஆய்ந்து வினவி அவர்க்குக் கவலை எதனால் நேர்ந்ததோ அதனைத் தீர்த்தல் என்பது தோன்ற "உற்ற பரிவு ஈர்த்தல்" என்றார். ஈர்த்தல்-அறுத்தல், எண்ணான் கறம் ஆவன: "ஆதுலர் சாலை யைய மறுசம யத்தோர்க் குண்டி, ஓதுவார்க் குணவு சேலை யுறுமேறு விடல்கா தோலை, மாதுபோ கம்ம கப்பால் மகப்பேறு மகவ ளர்த்தல், வேதைநோய் மருந்து கொல்லா விலைகொடுத் துயிர்நோய் தீர்த்தல்; கண்ணாடி பிறரிற் காத்தல் கன்னிகாதானங் காவே, வண்ணார்நா விதரே சுண்ண மடந்தடங் கண்மருந்து, தண்ணீர்பெய் பந்தல் கோலத் தலைக்கெண்ணெய் சிறைச்சோ றோடு, பண்ணான விலங்கூணல்கல் பசுவின்வா யுறைகொடுத்தல்: அறவையாம் பிணம டக்க லறவைத்தூ ரியம்வ ருந்தா, நிறுவியேயிடம்வி டாம னிறை யத்தின் பண்டம் நல்கல், உறுதியா வுரிஞ்சு கின்ற தறியிவை யோது மெண்ணான், கறநிலை யபிதா னங்க ளம்பிகை செய்யு மாறே" எனச் சூடாமணி நிகண்டிற் கூறியிருப்பன காண்க. பெருஞ் செல்வர்களே எண்ணான் கறங்களையும் இயற்றத்தக்கவர்.