பக்கம் எண் :


68

"பல்லாற்றான் நல்லினமோம்பல்" என்றார். பொறுமைக் குணம் உடையார்க்கே "இன்னார்க்கினிய புரியும்" எண்ணம் தோன்றும் ஆதலால் "பொறையாளலை முன் வைத்து இன்னார்க்கினிய புரிதலைப் பின் வைத்தார். பல நூல்களைக்கற்பினும், அவற்றிலுள்ள நெறி முறையுணரினும் நெறி முறைகளைப் பிறர்க்கு எடுத்துரைப்பினும், அந்நெறி முறைபற்றி நிற்றல் அருமையாதலால் நெறி நிற்றல் சிறப்புடைத்து என்பது தோன்ற அதனை யிறுதியில் வைத்தார். நாப்பண்-நடு. நல்நாப்பண் என்ற அடை மொழியால் நல்லோர் எய்தும் மேலுலகத்தையுணர்த்தியது. துன்பவுலகில் வாழ்வார் ஆகிய மனிதர் நற்செயல் புரிந்தால் இன்ப வுலகம் எய்துவது ஒருதலை யென்பது இதனாற் கூறப்பட்டது. "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்" என்ற குறட்கருத்தையும் நோக்குக.

(கு-பு) நன்மை+இனம்=நல்லினம்:பண்புத்தொகை. சாரல், உணர்தல், ஓம்பல், ஆளல் புரிதல், நிற்றல் இவைகள் தொழிற் பெயர்கள். இன்னார், இன்னாமை என்பதன் அடியாகப் பிறந்த பலர் பாற் பெயர். இனிய:பலவின்பால் வினைமுற்றாலணையும் பெயர்.

39. முனியா னறமறங்கண் முக்குற்றம் பேணான்
நனிகாக்கு மொண்மை யுறைப்படுத்தும் பண்போன்
பனிநிலத்தின் வித்தாய்ப் பெயரா னடுக்கற்
றினியனா வான்மற் றினி.

(சொ-ள்) அறம் முனியான்-அறஞ்செய்வதில் வெறுப்பில்லாதவனும், மறங்கள் முக்குற்றம் பேணான்-பாவங்களையும் மூன்று குற்றங்களையும் செய்ய விரும்பாதவனும், நனிகாக்கும் ஒண்மை உறைப்படுத்தும் பண்போன்-மிகவும் காக்கப்படுகின்ற ஒழுக்கத்தை நிலை நிறுத்தும் குணமுடையவனும் (ஆகிய ஒருவன்) , பனி நிலத்தின் வித்தாய்-குளிர்ந்த நிலத்தில் இட்ட விதையைப்போல, பெயரான் நடுக்கு அற்று இனி இனியன் ஆவான்-நிலையை விட்டுப் பெயராமல அச்சமற்று வாழ்ந்து இனிமேல் எவர்க்கும் இனியவன் ஆவான்.