(க-து) அறம் புரிந்து பாவமும் குற்றமும் நீக்கி ஒழுக்கத்தைக்காத்து வாழும் ஒருவன் நிலை பெற்று இனியவனாய் இருப்பான். (வி-ம்) மறம்-பாவம். இஃது ஐந்து பாவங்களை யுணர்த்தும், அவை பொய், களவு, கொலை, கள்ளுண்டல், சூதாடல் என்ற ஐந்து என்பர்; சூதாடலை நீக்கிக் குருநிந்தை கூட்டிக் கூறுவர் பலர்; காமம் என்பது கூட்டிக் களவை விடுவார் சிலர்; புலவருலகம் கூறும் புதுமையிவை யெனவுணர்க. முக்குற்றம் ஆவன: காமம், வெகுளி, மயக்கம் என்பன. ஒண்மை என்பது விளக்கம் எனப்பொருள் பட்டு விளக்கத்திற்கு ஏதுவாய நல்லொழுக்கத்தினை யுணர்த்தியது. உறைப்படுத்தல்-உறைவிடமாகச் செய்தல். உறை-இருப்பிடம். நல்லொழுக்கத்தினைத் தன்பால் இருத்தியவன் எனக்கொள்க. வெப்பமான நிலத்தில் விதையிட்டாற் காய்ந்து பயனற்று இடந்தெரியாது மறைந்து போம்; குளிர்ந்த நிலத்தில் விதையிட்டால் அது அவ்விடத்தில் நின்று முளைத்து வளர்ந்து செழித்து நிலை பெற்றுப் பயன் தரும்; அதுபோல நற்பண்புடையவனும் தான் நின்ற நிலையை விட்டுப் பெயராமல் புவியில் வளர்ந்து செழித்துப் பலர்க்கும் பயன் தருவான் என உவமையை விரித்துக்கொள்க. பெயரான்-பெயராமல் என எச்சப்பொருள் பட்டது. நடுக்கு- அச்சம். இனி என்பது அப்பண்புடையவன் ஆயின பின்பு என வருங்காலத்தை யுணர்த்தியது. மற்று: அசை. (கு-பு) முனியன், பேணான்:எதிர்மறை வினையாலணையும் பெயர். பண்பு+ஆன் என்ற பண்புப்பெயர் விகுதியின் ஆ ஓ ஆகிப் பண்போன்என நின்றது. "பெயர்வினை யிடத்து னளரய வீற்றயல், ஆ ஓ ஆகலும் செய்யுளு ளுரித்தே" என்பது விதி. பெயரான் என்பது முற்றெச்சம். துறவியல் 40. | முப்பாலை வீழ்வார் விலங்கார் செறும்பாலை முப்பான் மயக்கேழ் பிறப்பாகி-எப்பாலும் மெய்ப்பொரு டேறார் வெளியோரார் யாண்டைக்கும் பொய்ப்பாலை யுய்வாயாப் போந்து. |
|