பக்கம் எண் :


7

பதிப்புரை" ஆகிய நான்கும் வ. உ. சி அவர்களே வரைந்திருக்கின்றனர். பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்று "இன்னிலை" தான் என்பதற்கும் அதனை இயற்றியவர் பொய்கையார் என்பதற்கும் இது சிறந்த நூல் என்பதற்கும் பல காரணங்காட்டி விளக்குகிறார். இந்நூல் அவர்கள் கைக்குக் கிடைத்த விதம் அப் புத்தகத்தில் உள்ளபடி இங்கு வரைகின்றேன் அறிக. இன்னிலை'ஆசிரியர்' என்ற தலைப்பில் உள்ளது இது.

"இந்நூலினது ஏட்டுப் பிரதியின் முதல் ஏட்டுத் தொடக்கத்தில் மதுரையாசிரியரால் தொகுக்கப்பட்ட இன்னிலை நாற்பத்தைந்து நன்றாக என்னும் சொற்களும், அம் முதலேட்டின் முடிவில் திருமேனிக் கவிராயன் எழுதி வரும் இன்னிலை நாற்பத்தைந்து நன்றாக என்னுஞ் சொற்களும், அவ்வேட்டுப் பிரதியின் கடைசி ஏட்டு முடிவில் பொய்கையார் பாடிய இன்னிலை முற்றிற்று என்னும் சொற்களும், எழுதப்பட்டுள்ளன. இந்நூலின் ஏட்டுப் பிரதியை எழுதிய திருமேனி இரத்தினக் கவிராயரவர்கள் செந்தமிழ்ப் புலமையும் சீரிய ஒழுக்கமும் தெய்வ பக்தியுஞ் சிறந்து விளங்கியவர்கள். இந்நூலின் ஏட்டுப் பிரதியை அளித்த ஸ்ரீமான் மலையையாப் பிள்ளையவர்கள் அக்கவிராயவர்களின் ஏடுகளை யெல்லாம் போற்றி வைத்திருக்கும் அவர்களுடைய சந்ததியார்களின் தலைவராய் விளங்கியவர்கள். பொய்கையார் என்பவர் இன்னிலை என்னும் நூலை இயற்றிற்றிலர் என்றாவது, அந்நூலை வேறு யாரேனும் இயற்றினரென்றாவது நாம் கேள்விப்படவில்லை. ஆதலால் இன்னிலை என்பது இந்நூலே என்றும் இந்நூலை இயற்றியவர் பொய்கையாரே யென்றும் நாம் கொள்ளலாம்" என்பது,