(சொ-ள்) முப்பாலை வீழ்வார் செறும்பாலை விலங்கார்- (அறம், பொருள், இன்பம் ஆகிய) மூன்று பகுதிகளையும் விரும்புவார் தம்மை வருத்தும் பகுதியை விட்டு விலகார், முப்பால் மயக்கு ஏழ் பிறப்பு ஆகி-அம் மூன்று பகுதியால் மயங்கும் மயக்கத்தால் எழுவகைப் பிறப்புக்களும் உண்டாகி, யாண்டைக்கும் பொய்ப்பாலை யுய்வகையா போந்து-எவ்விடத்திற்கும் பொய்யாகிய பகுதிகளையே பிழைக்கும் வழியாகக் கொண்டு சென்று, எப்பாலும் மெய்ப்பொருள் தேறார் வெளி ஓரார் -எவ்விடத்திலும் உண்மைப்பொருளைத் தெளியார்; பரவெளியையும் ஆராய்ந்தறியார். (க-து) இல்வாழ்வின் நின்று இன்பம் பொருள் அறம். இவற்றை விரும்பியவர்க்குத் துன்பம் நீங்காது; எழுவகைப் பிறவியும் உண்டாகும், பொய்வாழ்க்கையே பிழைக்கும் வழியாகக் கொள்வர், மெய்ப்பொருளையும் அறியார். ஆதலால் துறவே சிறந்தது. (வி-ம்) துறவு வீட்டிற்கு வழியாதலால் அவ்விலக்கணம் கூறப்படுவது குறித்து அறம் பொருள் இன்பம் வீடு என்ற நாற் பொருளில் வீட்டினை விலக்கி முப்பால் என்றது முன்னின்ற மூன்றினையும் உணர்த்திற்று. பொருளையீட்டி அறம் புரிந்து இன்பம் நுகர்ந்து வாழ்வது துன்பத்தையே பெரும்பாலும் தருவதால் "செறும்பாலை விலங்கார்" என்றார். இங்கு செறும்பால் என்றது வருத்துகின்றபகுதி எனப் பொருள்பட்டுக் குறிப்பினால் துன்பத்தை யுணர்த்திற்று, ஏழுவகைப்பிறப்பாவன தேவர், மக்கள், விலங்கு, பறவை, நீர்வாழ்வன, ஊர்வன, தாவரம் என்பவை.யாண்டைக்கும் என்பது எவ்வகையான முயற்சிகள் செய்வதிலும் எனப் பொருள் தந்து நின்றது. எப்பாலும் என்றது எவ்வழியில் நின்றாலும் எனப் பொருள் தந்தது. ஒருவன் கடவுட் பூசனைபுரியும் தொழில், ஆசிரியனாகிக் கல்வி கற்பிக்கும் தொழில் முதலிய உயர்ந்த தொழில்களில் இருப்பினும் அவனும் மெய்ப்பொருளை யறியான் என்ற கருத்துத் தோன்ற "எப்பாலும் மெய்ப்பொருள் தேறார்" என்றார். சிறந்த அறிவும் முப்பாலிற் கருத்தூன்றினால் மயங்கும் என்பது குறிப்பு. உய்வாய்-பிழைக்கும் வழி.
|