மனைவி மக்கள் முதலியவை ஒருவர்க்கு உண்மையான பொருள்களாகத் தோன்றுவதுதான் மயக்கம், உண்மையாக அவரவர்க்குத் தோன்றுவதால் "உண்மை மால்" என்றார். இருள்-இருளைப்போன்ற அஞ்ஞானத்தை யுணர்த்தியது; இது உவமையாகுபெயர். ஐயமும் கவலையும் நீங்கினாலொழியப் பரம்பொருளைப் போற்றுவது இயலாது; ஆதலால் "சார்ஐயம் புண் விலங்கப் போற்றினோர்" என்றார். புண் என்பது உடற் புண் போன்ற உள்ளக்கவலையையுணர்த்திற்று. இதுவும் ஆகுபெயர். நுண்ணுணர்வு-கூரிய அறிவு. அவ்வறிவால் மேலும் வலிய அறிவினையும், பரம்பொருளிடத்திற்குச் செலுத்தும் இயற்கையையும் அடைவார் என்பது விளங்க "நுண்ணுணர்வான்...புலனை...இயலைச் சார்ந்து" என்றார். புலனையும் இயலையும் சார்ந்தவர் தவறாது முத்தியை யடைவார் என்பது. போற்றுவார் கூரிய அறிவினால் அறிவு வலிமையடைந்து செல்லும் நெறியறிந்து முத்தியடைவர் என்பது இதனாற் கூறப்பட்டது. (கு-பு) ஈர்த்து, கடிந்து என்பன செய்து என்ற வாய்பாட்டு வினையெச்சம். சாரையம், சார்பொருள், ஊர் இயல் என்பன வினைத்தொகை. போற்றினோர்:வினையாலணையும் பெயர். படுவர்:தெரிநிலை வினைப் பலர்பாற் படர்க்கை வினைமுற்று. ஒண்பொருள்:பண்புத்தொகை. அண்ணா:ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். நிலை என்பதனோடு சேர்ந்து குறிப்பால் முத்தியையுணர்த்தியது. 42. | மாசகல வீறு மொளியன்ன நோன்புடையோர் மூசா வியற்கை நிலனுணர்வார்-ஆசகற்றி இன்ன லினிவாயாக் கொள்வார் பிறப்பிறப்பிற் றுன்னா ரடையும் நிலன். |
(சொ-ள்) மாசு அகல வீறும் ஒளியன்ன நோன்பு உடையார்-களங்கமற்றுப்பெருகும் ஒளிபோன்ற தவத்தினையுடையார். மூசா இயற்கை நிலன் உணர்வார்-அழியாத இயற்கையையுடைய இடம் (ஆகிய முத்தி) அறிவார்,ஆசு அகற்றி இன்னல் இனிவாயா கொள்வார்-முக்குற்றங்களையும்
|