வினையாலணையும் பெயர். இனிவாய்:தொகுத்தல் விகாரம். துன்னார்:எதிர்மறைப்பலர்பால் வினைமுற்று. பிறப்பு+இறப்பு:குற்றியலுகரம் கெட்டது. 43. | பேராப் பெருநிலன் சேய்த்தே யுடம்பொன்றா பேரா வொருநிலனா நீங்காப் பெரும்பொருளை யேரா வறிந்துய்யும் போழ்து. |
(சொ-ள்) உடம்பு ஒன்றா-பலவகையுடம்புகளிலும் பொருந்தியும் பொருந்தாத, பேரா ஒரு நிலனா-பெயராத ஒப்பற்ற உலகமாக, நீங்காப் பெரும் பொருளை-(எப்போதும்) நீங்காத பெருமையுடைய பரம்பொருளை, ஏரா அறிந்து உய்யும் போழ்து-எழுச்சியாக வுணர்ந்து பிழைக்கும் பொழுதில், பேரா பெருநிலன் சேய்த்தே-இடம் விட்டுப் பெயராத பெருநிலமாகிய முத்தியுலகம் தூரத்துள்ளதோ (அடுத்ததுதான்) (க-து) பரம்பொருளை யுணர்ந்து வாழ்வார்க்கு முத்தி சேர்தல் எளிது. (வி-ம்) பலவகையுயிர்க்குள் உயிராகி நிற்பினும் அவ்வுடம்புகளில்ஒட்டாது நிற்பவன் இறைவன்; நல்வினை தீவினைப் பயன்றுய்ப்பதும் அவ்வவ்வுடம்புகளே; இறைவன் அவற்று ணிற்பினும் இன்ப துன்பங்கள் அவ்வவ்வுயிர்க்கே யுரியன என நூல்கள் கூறுவதால் "உடம்பு ஒன்றா" என்றார். "ஆக்கையெனும் புழுக்குரம்பை யணைந்தணையாப் பொருளை" எனப் பிறர் கூறுவதும் காண்க. பேரா ஒரு நிலன் என்றது உலக முழுவதையும். இடம் விட்டுப் பெயர்ந்து செல்லாது உலகம்; ஆதலின் "பேராநிலன்" என்றார். நிலனா நீங்காப் பெரும் பொருள் என்றுகொள்க. 'அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசமா யானந்த பூர்த்தியாகி, யருளொடு நிறைந்ததெது' என்ற தாயு'மானார் வாக்கின் உண்மையுணர்க. உலகம்வேறு; பரம்பொருள் வேறு என நீக்கமற நிற்பதே பரம்பொருள் இயற்கையாம். ஏரா அறிந்து-எழுச்சியாக அறிந்து. ஏர்-எழுச்சி, இது மனவெழுச்சியைக் குறித்தது. உய்யும்-வாழும். பரம்பொருளையறிவதற்குக் கல்வியும் கேள்வியும் நல்லினஞ் சேர்தலும் வேண்டும்.
|