இவையாவும் மனவெழுச்சி யில்லார்க்குக் கூடா ஆகையால் "ஏரா அறிந்து" என்றார். உய்யும்போழ்து அவ்வாறு உய்யும் அவர்க்குப் பெருநிலன் சேய்த்தே எனச் சொல் வருவித்துப் பொருள் முடிக்க. சேய்த்து-தூரத்துள்ளது. ஏ-வினாவாகி வந்து எதிர்மறைப் பொருளைத் தந்தது. சேய்த்தே-சேய்த்தோ-தூரத்துள்ளதோ? இல்லை; அடுத்துள்ளது என்று பொருள் கொள்க. பரம்பொருளை யுணர்வார்க்கு முத்தி கிடைப்பது எளிது என்பது இதனாற் கூறப்பட்டது. (கு-பு) பேரா:ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் நீங்கா, ஒன்றா என்பனவும் அன்ன. பெரும்பொருள், ஒரு நிலன் இவை பண்புத்தொகைகள். உடம்பு+ஒன்றா:குற்றியலுகரங் கெட்டது. அறிந்து+உய்யும்:குற்றியலுகரங்கெட்டது. சேய்த்து-சேய்மையென்னும் பண்படியாகப் பிறந்த ஒன்றன் பாற் குறிப்பு வினைமுற்று. | 44. | மெய்யுணர்வே மற்றதனைக் கொள்ள விழுக்கலனாம் பொய்யுணர்வா னீண்டிய வெல்லா மொருங்கழியும் ஐயுணர்வா னாய்ந்து வறஞ்சார்பாச் சார்பொறுக்க நையா நிலைவேண்டு வார். |
(சொ-ள்) பொய் உணர்வான் ஈண்டிய எல்லாம் ஒருங்கு அழியும்-பொய்யாகிய அறிவினால் சேர்க்க வந்து சேர்ந்த பொருள்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கெடும், நையா நிலை வேண்டுவார்-அழியாத நிலையாகிய முத்தியை விரும்புவோர், ஐயுணர்வான் ஆய்ந்து - ஐந்தாகிய அறிவினால் ஆராய்ந்து, அறம் சார்பு ஆ-துறவறத்தைச் சார்பாகக்கொண்டு, சார்பு ஒறுக்க-பற்றுக்களை யெல்லாம் ஒழிக்க, மெய்யுணர்வே மற்று அதனைக் கொள்ள விழு கலன் ஆம்-உண்மையறிவே அம் முத்தியுலகத்தை யடைவதற்குச் சிறந்த புணையாகும். (க-து) பொய்யுணர்வினாற் சேர்த்த பொருள்களெல்லாம் தொலையும். பற்றுக்களையெல்லாம் ஒழித்துப் பின் மெய்யுணர்வு பெற்றால் முத்தியுலகம் பெறலாம்.
|