(வி-ம்) ஐயுணர்வு என்றது மனவுணர்வை யுணர்த்தியது; ஐந்து புலன்களாலும் நுகர்ந்து அறிந்ததே மனவறிவு ஆதலின். சார்பு அகப்பற்று, புறப்பற்றாகிய பொருள்கள். யான் என்பது அகப்பற்று. எனது என்பது புறப்பற்று. இவ்விரண்டினையும் ஒழித்தலே பற்றறுத்தலாம் "யானென தென்னும் செருக்கறுப்பான் வானோர்க், குயர்ந்த வுலகம் புகும்" என்பது பொய்யாமொழி. அறம் சார்பா என்றது துறவறத்தைத் துணையாகக் கொண்டு எனப் பொருள் தந்தது. துறவறத்தைத் துணையாகக் கொள்ளலாவது "பற்றில்லான் பற்றினைப் பற்றுதலாம்" "பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப், பற்றுக பற்று விடற்கு" என்ற குறட் கருத்தும் ஆய்க. நையா நிலை என்றது முத்தியுலகத்தை; என்றும் ஒரு தன்மைத்தாயிருக்கும் நிலையதுவே யாதலின். பொய்யுணர்வான் ஈண்டிய வெல்லாம் என்றது எனது எனது என்று கருதி யீட்டிய மண் பொன் பெண் முதலிய எல்லாப் பொருள்களையும் யுணர்த்தும். அவைகளெல்லாம் ஈட்டியவன் அழிந்தவுடன் எல்லாம் அவனைவிட்டு அப்பொழுதே நீங்குதலால் "ஒருங்கு அழியும்" என்றார். "அடுத்தா னிறும்போதிலர்ச்சித்த பொன்பூண், வடுத்தா னிலாவாழ்வு மனைமற்றும் எங்கே, எடுத்தான் விழுந்தால் விழாதே யிருக்கத், தடுத்தாலு மங்கோர் தலைச்சுமை யிராதே" என்றார் பிறரும். தலையிற்சுமை வைத்துநடந்தவன் தவறி விழுந்தாற் சுமையும் கீழ் விழுவது போல நீங்கும் என்பது இக்கவியின் கருத்து. மெய்யுணர்வு என்பது உண்மையை யறியும் அறிவு என விரியும். அழியும் பொருள் அழியாப் பொருள் இவற்றை யாய்ந்து அழியாப் பொருளைப் பற்றும் அறிவே மெய்யுணர்வு என்று கொள்க. அதனை அடிப்படையாகக்கொண்டதுதான் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற வழிகள் நான்கும். இவ்வழிகளிற் சென்று வீட்டுலகம் அடைவதற்கு மெய்யுணர்வு துணையாதலால் அதனை "விழுக்கலனாம்" என்றார். கலன்-புணை; மரக்கலம். (கு-பு) மெய்+உணர்வு பொய்+உணர்வு : தனிக்குறில் முன்னொற்றாதலால் இரட்டியது; மற்று:அசை. அதனை என்ற சுட்டு நையா நிலை எனப் பின் வந்ததனைச் சுட்டிற்று. பொய்யுணர்வு+ஆன், ஐயுணர்வு+ஆன் மூன்றனுருபு கருவிப் பொருளில் வந்தது, ஒறுக்க:வியங்கோள்: வேண்டுவார்:வினையாலணையும் பெயர். அதுவே எழுவாய்.
|