இன்னிலை முதலிற் பதித்ததும் இரண்டாவது பதித்ததும் வ.உ.சி அவர்களே என்பதும், ஏட்டுப் பிரதியும் ஒன்றே என்பதும், அது மலையையாப் பிள்ளையவர்கள் அளித்தனர் என்பதும், மதுரையாசிரியரால் தொகுக்கப்பட்ட இன்னிலை நாற்பத்தைந்து, திருமேனிக் கவிராயன் எழுதி வரும் இன்னிலை நாற்பத்தைந்து, பொய்கையார் பாடிய இன்னிலை முற்றிற்று என அவ்வேட்டின் முதலிலும் முடிவிலும் எழுதப்பட்டிருந்தன என்பதும் நாம் அறிகின்றோம். உரையாசிரியர்களில் இன்னார், இந்நூற்கவிகளை மேற்கோள் காட்டி, இன்னிலையில் உள்ளது என்று குறிப்புக் காட்டியுள்ளனர், என்பதற்கு ஆதாரம் ஒன்று மின்று, வ. உ. சி அவர்களும் சான்று காட்டினாரல்லர். உரையாசிரியர் சிலர் மேற்கோளாக இன்னிலையிலுள்ள கவிகளை எடுத்தாண்டனர் என்று வ. உ. சி. அவர்கள் கூறியதை ஆராய்ந்தால் வியப்பு விளைகின்றது. தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல், 23 ஆம் சூத்திரம் இளம்பூரணருரை, கற்பியல், 5 ஆம் சூத்திரவுரை 12 ஆம் சூத்திரவுரை ஆகிய இடங்களைச் சுட்டி இன்னிலை நூலில் 2, 37, 29, 32, 35 எண்ணுடைய ஐந்து பாடல்களும் வந்துள்ளன என விளக்கினர். இளம் பூரணத்தைநோக்க அவற்றுள் ஒன்றேனும் வந்திலது. முந்தின பதிப்புக்களில் இருந்து பின்னர் அவை விடுபட்டனவோ என ஐயுறும் நிலையிலுள்ளது. தொல்காப்பியம் செய்யுளியல் 113 ஆம் சூத்திரம் பேராசிரியருரையில் அவர்கள் கூறியவாறே இன்னிலை 5 ஆம் செய்யுள் மேற் கோளாக வந்துள்ளது. யாப்பருங்கலவிருத்தி யுரையாசிரியரும் இன்னிலை 2 ஆம் செய்யுளை மேற்கோளாகக் காட்டியுள்ளார். ஆயினும் அக்கவிகள் இன்னிலை என்ற நூற் கவிகள் தாம் என்பதற்குச் சான்று தோன்றும் வகை ஆங்கில்லை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாக இன்னிலை வந்த வழி இந்த வழி என்றுணர்க. இனிக் கைந்நிலை வந்த வழி காண்போம்.
|