பக்கம் எண் :

இனிய வுளவாக வின்னுத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

 

இனிய உளவாக இன்னாத கூறல்--தனக்கு அறமும் பிறர்க்கு இன்பமும் பயக்கும் இனிய சொற்களும் எளிதாய் வழங்குமாறு தன்னிடத்திருக்கவும்,அவற்றை வழங்காது தனக்குத் தீதும் (பாவமும்) பிறர்க்குத் துன்பமும் பயக்கும் கடுஞ் சொற்களை ஒருவன் வழங்குதல் ; கனி இருப்பக் காய் கவர்ந்த அற்று - இனியனவும் வாழ்நாளை நீட்டிப்பனவுமான கனிகளும் கைப்பனவும் சாவைத் தருவனவுமான காய்களும் ஒரு சரியாய்க் கைக்கு எட்டுவனவாக விருக்கவும் , அவற்றுள் முன்னவற்றை விட்டுவிட்டுப் பின்னவற்றை மட்டும் பறித்துண்ட லொக்கும் .

பொருளைச் சிறப்பிக்கும் அடைமொழிகள் உவமத்திற்கும் ஏற்கு மாதலால், இனிய கனி என்பது ஒளவையாருண்ட அருநெல்லிக் கனி போலும் வாழ்வு நீட்டியையும்,இன்னாத காய் என்பது எட்டிக்காய் போலும் உடன்கொல்லியையும், குறிக்கும் என அறிக. ' கவர்ந்தற்று ' என்னும் சொல் மரங்களினின்று காய்கனிகளைப் பறிக்குஞ் செயலை நினைவுறுத்தும். கவர்தல் பறித்தல்; இங்குப் பறித்துண்டல். பிறரிடத்து இன்னாச் சொற் சொல்லுதல் தனக்கே தீங்கை வருவிக்கும் பேதைமை யென்பது இதனாற் கூறப்பட்டது.

உவமமும் பொருளும் சேர்ந்தது உவமை என அறிக.