பக்கம் எண் :

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால்
கலத்தீமை யாற்றிரிந் தற்று.

 

பண்பு இலான் பெற்ற பெருஞ்செல்வம் - பண்பில்லாதவன் பழம் பிறப்பிற் செய்த நல்வினையின் பயனாக அடைந்த பெருஞ்செல்வம், ஒருவற்கும் பயன்படாது கெடுதல்; நல் பால் கலம் தீமையால் திரிந்து அற்று- நல்ல ஆவின்பால் வார்த்த கலத்தின் குற்றத்தாற் களிம்பேறிக் கெட்டாற்போலும்.

கலந்தீமை என்பது இன்னோசை பற்றிக் கலந்தீமை யென மெலிந்தது. வினையுவமையாதலின் ,பொருளின்கண் ஒத்ததொழில் வருவிக்கப்பட்டது. முன்னை நல்வினைப்பயன் என்பது தோன்றப் ' பண்பிலான் ' என்றும் , ஈட்டும் ஆற்றலிலன் என்பது தோன்றப் ' பெற்ற ' என்றும், எல்லாப் பயனும் பெறுதற்கேற்றது என்பது தோன்றப் ' பெருஞ்செல்வம் ' என்றும , உடையவனுக்கும் பயன்படாமை தோன்றத் ' திரிந்தற்று ' என்றும், கூறினார். இதனால் வருகின்ற அதிகாரத்திற்குந் தோற்றுவாய் செய்யப்பட்டது. இந்நான்கு குறளாலும் பண்பிலாரின் இழிவு கூறப்பட்டது.