பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்-குடி

அதிகாரம் 101. நன்றியில் செல்வம்.

அஃதாவது ,ஈட்டியவனுக்கும் பிறருக்கும் பயன்படாத செல்வத்தின் தன்மை உடையவனது குற்றம் உடமையின் மேலேற்றப்பட்டது. 'பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் ' என்று மேலதிகார ஈற்றில் இதற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டதே , இதன் அதிகார முறைமையைக் காட்டும்.

 

வைத்தான்வாய் சான்ற பெரும்பொரு ளஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில்.

 

வாய்சான்ற பெரும்பொருள் வைத்தான் அஃது உண்ணான் - தன் மனையிட மெல்லாம் நிறைதற்கேதுவான பெருஞ்செல்வத்தை ஈட்டிவைத்தும் ,கஞ்சத்தனத்தால் அதை நுகராதவன் , செத்தான் உடம்போ டுளனாயினும் செத்தவனாவன்; செயக்கிடந்தது இல் - அதைக்கொண்டு அவன் செய்யக் கிடந்ததொரு செயலுமில்லை.

செல்வமிருந்தும் அதை நுகராமையால் , செத்தவனுக்கு ஒப்பாவன் என்பது கருத்து. ' வைத்தான் ' முற்றெச்சம்.

"உண்ணா னொளிநிற னோங்கு புகழ்செய்யான்
துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே
வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ
இழந்தானென் றெண்ணப் படும்."

(நாலடி.9)