பக்கம் எண் :

பொருளானா மெல்லாமென் றீயா திவறு
மருளானா மாணாப் பிறப்பு.

 

பொருளான் எல்லாம் ஆம் என்று - செல்வமொன்று மட்டுமிருந்தால் அதனால் எல்லாக் கருமமும் ஆகுமென்று கருதி ; ஈயாது இவறும் மருளான் - அதைப் பிறர்க்கீயாது இறுகப் பற்றும் மயக்கத்தினால் ; மாணாப் பிறப்பு ஆம் - இழிவான பிறப்பு உண்டாம்.

இம்மைக்கும் மறுமைக்கு முரிய வினையின்பங்கள் யாவும் அடங்க ' எல்லாம் ' என்றார். மருளாவது செல்வம் நிலையானதென்றும் , பிறர்க்கு ஈவதாற் குறைந்துவிடுமென்றும் கருதுதலும் ; "செல்வம் சகடக்கால் போல வரும் " என்றும் (நாலடி.2) , செல்வத்துப் பயனே யீதல் (புறம். 189) "ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்" என்றும் , இம்மைச் செய்தது மறுமைக் காம் (புறம்.134) என்றும் , அறியாமையுமாம், மாணாப் பிறப்பாவன.

சிறப்பில் சிதடு முறுப்பில் பிண்டமும்
கூனுங் குறளு மூமுஞ் செவிடும்
மாவும் மருளும்

(புறம்.28)

என்னும் எண்பேரெச்சமும் அலியுமாம்.இனி ,வீணாகப் புதையலைக் காக்கும் பேயும் பூதமும் எனினுமாம்.