பக்கம் எண் :

கொடுப்பதூஉந் துய்ப்பதூஉ மில்லார்க் கடுக்கிய
கோடியுண் டாயினு மில்.

 

கொடுப்பதும் துய்ப்பதும் இல்லார்க்கு -பிறருக்கீவதும் தாம் நுகர்வது மாகிய இரண்டுமில்லாதவருக்கு; அடுக்கிய கோடி உண்டாயினும் இல்-கோடிக் கணக்கான செல்வமிருப்பினும் அது செல்வமிருப்பதாகாது.

செல்வத்தின் இரு பயனுமின்மையால் ' இல் ' என்றார். இன்பத்தினும் அறஞ் சிறந்தமையால் முற்கூறப்பட்டது. ' கோடி' அளவையாகு பெயர். ' கொடுப்பதூஉம் ' , ' துய்ப்பதூஉம் ' இன்னிசை யளபெடைகள்.உம்மை உயர்வு சிறப்பு.

"எனதென தென்றிருக்கு மேழை பொருளை
எனதென தென்றிருப்பன் யானும் - தனதாயின்
தானு மதனை வழங்கான் பயன்றுவ்வான்
யானு மதனை யது"

(நாலடி.276)

என்பது இங்குக் கவனிக்கத் தக்கது.