பக்கம் எண் :

ஏதம் பெருஞ்செல்வந் தான்றுவ்வான் றக்கார்க்கொன்
றீத லியல்பிலா தான்.

 

தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பு இலாதான்- தகுதியுடையவர்க்கு அவர் வேண்டிய தொன்றை ஈயும் இயல்பில்லாதவனாய்; தான்துவ்வான் -அதன்மேல் தானும் நுகராதவனாயிருப்பவன்; பெருஞ்செல்வம் ஏதம் -அவ்விரண்டுஞ் செய்தற் கேற்ற தன் பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோயாவன்.

செல்வத்தின் பயன்படுந் தன்மையை நோய் போற் கெடுத்தலின், ' நோய் ' என்றார். ' தக்கார் ' அந்தணர்,அடியார்,புலவர் முதலியோர் ' தக்கார் என்றதனால் , ' தகுதியில்லார்க்கு ஈதல் தவறென்பது பெறப்படும். ' ஏதம்' ஆகுபெயர். எச்சவும்மை தொக்கது.இனி, அவ்விரு பயனும் கொள்ளாதவனது பெருஞ் செல்வம் துன்பமே தரும் என்பது அத்துணைச் சிறந்த தன்று.