பக்கம் எண் :

அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வ மிகநலம்
பெற்றா டமியள்மூத் தற்று.

 

அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் - ஒரு பொருளுமில்லாதார்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடாதவனது செல்வம் வீணாய்க் கழிதல் , மிக நலம் பெற்றாள் தமியள் மூத்த அற்று - குணத்திற்சிறந்த கட்டழகி யொருத்தி மணஞ்செய்து கொடுப்பாரின்மையால் கணவனின்றித் தனித்தவளாய் மூத்த தன்மைத்து.

இதில் வந்துள்ள உவமம் பெண்ணின் உரிமையின்மையைக் காட்டுதலால், பெரும்பாலும் பண்டைக் காலத்திற்கே ஏற்றதாம்.எனினும் இக் காலத்திலும் இது நிகழக் கூடியதாதலால் உவமமாதற்கு எள்ளளவும் இழுக்கில்லை யென்க. ' நலம் ' அகத்தழகு புறத்தழகு என்னும் இரண்டையுங் குறிக்கும். ' பெற்றாள்' என்பது இரண்டனையும் ஒருங்கே பெறுதலின் அருமையை உணர்த்தும்.பயன்படாமை செல்வ த்திற்கும் பெண்ணிற்கும் பொதுவேனும், செல்வம் நுகர்ச்சிப் பொருளாகவே யிருப்பதென்றும் ,பெண் கணவனை நோக்க நுகர்ச்சிப் பொருளாகவும் தன்னை நோக்க நுகர்வாளாகவும் இருப்பவள் என்றும் , வேறு பாடறிதல் வேண்டும். இதனால் தன் விருப்பப்படியே இறுதிவரை மணஞ் செய்யாதிருக்கும் குணமணிக் கட்டழகி , இக்குறட் கேற்ற உவமமாகாள் என்பதையும் அறிந்து கொள்க.