பக்கம் எண் :

அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய
வொண்பொருள் கொள்வார் பிறர்.

 

அன்புஒரீஇ - ஒருவன் தன் கஞ்சத் தனத்தினால்; உறவினரிடத்தும் நண்பரிடத்தும் அன்புசெய்தலை யொழிந்து; தற்செற்று - தனக்கு வேண்டியவற்றை நுகராது தன்னையுங் கெடுத்து ; அறம் நோக்காது - வறியார்க்கு ஈதலாகிய அறத்தைக் கருதவுஞ் செய்யாது ; ஈட்டிய ஒண் பொருள் பிறர் கொள்வார் - வருத்தித் தேடிய சிறந்த பொருளைக் கள்வரும் கொள்ளைக்காரரு மாகிய பிறரே கவர்ந்து பயன் பெறுவர்.

' ஈட்டிய ' என்பதால் சிறிது சிறிதாக நீண்ட காலம் வருந்தித் தொகுத்த தென்பதூம் ஒண்பொருள் என்பதால் நன்றாய் பயன்படக கூடிய தென்பதும், 'பிறர்' என்பதால் சிறிதும் தொடர்பற்றவ ரென்பதும்,பெறப்படும்.'ஒரீஇ' இன்னிசையளபெடை.

"ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்".

என்று இரட்டுறலாகக் கூறினார் ஒளவையார் (கொ. வே. 4)
ஈயார்= ஈயாதவர், ஈக்கள். தேட்டு= தேடிய சொத்து , தேன்.தீயார்=கொடியவர். தீப்பந்தத்தை யுடைய குறவர்.