பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்-குடி

அதிகாரம் 102. நாணுடைமை.

அஃதாவது உயர்குடிப்பிறந்து மானம் பெருமை சால்பு பண்பு ஆகிய குணங்ளையுடையோர் தமக்குப் பொருந்தாத கருமங்களைச் செய்ய நாணுந்தன்மை. அதிகார முறைமையும் இதனால் விளங்கும்.

 

கருமத்தா னாணுத னாணுத் திருநுத
னல்லவர் நாணுப் பிற.

 

நாணுக் கருமத்தால் நாணுதல் -நன்மக்கள் நாணுவது தீய வினைகள் செய்ய வெட்கிப் பின் வாங்குதல்; பிற திருநுதல் நல்லவர் நாணு - அஃதன்றித் தனித்து வெளிச் செல்லுதல் , அறியாத ஆடவரொடு உரையாடல், ஆடவருள்ள அவையிற் பேசுதல் முதலிய பிறவற்றிற்கு வெட்கப் படுதலும் கூச்சப் படுதலும் , அழகிய நெற்றியையுடைய குலமகளிர்க்கேயுரிய நாண்களாம்.

'திருநுதல் நல்லவர்' என்பது பாராட்டுப் பற்றிய புகழ்ச்சிச் சொல். பிற ' திருநுதல் நல்லவர் நாணு' என்றதனால் ஏனையது நன்மக்கள் நாண் என்பதும், ' நாணுதல் ' என்றதனால் கருமத்தின் இழிவும் பெறப்பட்டன. நாணும் வினைப்பன்மை பற்றிப் 'பிற ' என்றார் இக்குறளின் பிற்பகுதிக்கு, "அஃதல்லாத நாணம் அழகிய நுதலினாலே நல்லாராகிய கணிகையர் நாணத்தோடு ஒக்கும் என்றவாறு". என்றுரைத்தார் மணக்குடவர். இனி அற்றமறைத்தல் முதலியன பொதுமகளிர் நாணோ டொக்குமென்றுரைப்பாரு முளர். அவர்க்கு நாண் கேடு பயக்குமென விலக்கப்படாமையானும், அவர் பெயராற் கூறப்படாமையானும் , அஃதுரையன்மை அறிக. என்று பரிமேலழகர் கூறியிருப்பது சரியே. இதனால் நாணின் இலக்கணங் கூறப்பட்டது.