பக்கம் எண் :

ஊனைக் குறித்த வுயிரெல்லா நாணென்னு
நன்மை குறித்தது சால்பு.

 

உயிர் எல்லாம் ஊனைக் குறித்த - எல்லா வுயிர்களும் உடம்பைத் தமக்கு நிலைக்களமாகக் கொண்டு அதனைப்பற்றும்; சால்பு நாண் என்னும் நன்மை குறித்தது- அதுபோலச் சான்றாண்மை நாண் என்னும் நற்குணத்தைத் தனக்கு நிலைக்களமாகக் கொண்டு அதனைப் பற்றும்.

உயிர் உடம்பொடு கூடியல்லது வாழாதது போல, சால்பு நாணோடு கூடியல்லது நடவாது என்பதாம். 'ஊன்' ஆகுபெயர். ' உடம்பு' வகுப்பொருமை.

'நன்மை' ஆகுபொருளது. 'ஊனை' என்று பாடங் கொள்வர் மணக்குடவ காலிங்க பரிப்பெருமாளர்.