பக்கம் எண் :

அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கஃ தின்றேற்

பிணியன்றோ பீடு நடை.

 

சான்றோர்க்கு நாண் உடைமை அணி அன்றோ-அறிவு நிறைந்தோர்க்கு நாணுடைமை ஓர் அணிகலமே; அஃது இன்றேல் பீடுநடை பிணி அன்றோ - அவ்வணிகல மில்லையாயின் அவரது பெருமித நடை அவருக்கொரு நோயேயாம்.

அணிசெய்வதை 'அணி' யென்றும் , இயல்பிற்கு மாறானதைப் 'பிணி' யென்றும் கூறினார்; எதிர்மறையடுத்த ஓகார வினாக்கள் ஓசை வேறுபட்டால் உடன்பாட்டுப் பொருள் தந்து அதைத் தேற்றஞ் செய்தன. இக்குறளின் பிற்பகுதிக்கு, "அவ்வாபரண மில்லையாயின் அவர் பெருமிதத்தையுடைய நடை கண்டார்க்குப் பிணியாம்...பொறுத்தற் கருமையிற் 'பிணி'யென்றுங் கூறினார்". என்பது பரிமேலழகருரை.இம் முக்குறளாலும் நாணுடைமையின் சிறப்புக் கூறப்பட்டது.