பக்கம் எண் :

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினு
ஞாலத்தின் மாணப் பெரிது.

 

காலத்தினால் செய்த நன்றி- ஒருவனது வாழ்க்கைக்கேனும் தொழிற்கேனும் இறுதி நேரும் நெருக்கடி வேளையில் அதை நீக்க இன்னொருவன் செய்த வுதவி; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது- பொருளளவிலும் முயற்சியளவிலும் சிறிதாயிருந்தாலும், அக்கால நிலைநோக்க நிலவுலகத்தினும் பெரிதாம்.

ஒருவர் செய்த நன்றியை அது செய்யப்பட்ட காலநிலைக்கேற்ப மதிக்க வேண்டுமென்பது கருத்து. 'காலத்தினால்' என்பது காலத்தாலே வந்தான் என்னும், மேலைவடார்க்காட்டு வழக்குப் போன்ற வேற்றுமை மயக்கம்.