பக்கம் எண் :

நாணகத் தில்லா ரியக்க மரப்பாவை
நாணா லுயிர்மருட்டி யற்று.

 

அகத்து நாண் இல்லார் இயக்கம் - தம் மனத்தில் நாணில்லாத மாந்தர் நாணுடையார் போன்றே நடமாடும் நடமாட்டம்; மரப்பாவை நாணால் உயிர் மருட்டிய அற்று - மரத்தினாற் செய்த சிறு படிமை, தன்னை யாட்டும் பொறிக்கயிற்றா லேற்பட்ட தன் ஆட்டத்தினால், தான் உயிருள்ளது போல் தோன்றுமாறு பார்ப்பவர் கண்களை மயக்கினாற் போலும்.

நாணில்லாதவன் செத்தவனை யொத்தவன் என்பது கருத்து. 'உயிர் மருட்டி யற்று' என்பதால் , பாவையின் அழகும் உயிரோவிய வேலைப்பாடும் அக்காலத் தமிழரின் படிமைக் கலைத் தேர்ச்சியும் உணரப்படும்.இம்மூன்று குறளாலும் நாணில்லாரின் இழிவு கூறப்பட்டது.