பக்கம் எண் :

ஆள்வினையு மான்ற வறிவு மெனவிரண்டி
னீள்வினையா னீளுங் குடி .

 

ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள்வினையான்-முயற்சியும் நிறைந்த அறிவும் என்று சொல்லப்படும் இரண்டினையுமுடைய இடையறாத செயலால்; குடிநீளும்-ஒருவனது குடி உயரும்.

ஆள்வினை ஆண்டு நடத்துஞ் செயல். ஆனுதல்-நிறைதல். அறிவுநிறைதலாவது இயற்கை யறிவோடு செயற்கையறிவுஞ் சேர்தல். ஆள்வினை சோம்பலை நீக்கற்கும் ஆன்றவறிவு வெற்றிபெறச் சூழ்தற்கும் வேண்டியனவாம். ’நீள்வினை’ விடாமுயற்சி. குடிநீள்தல் தொடர்தலும் உயர்தலும்.