பக்கம் எண் :

குடிசெய்வார்க் கில்லை பருவ மடிசெய்து
மானங் கருதக் கெடும்.

 

மடிசெய்து மானம் கருதக் கெடும்-தங்குடியை முன்னேற்றுவார், அத்தொண்டைக் கவனியாது காலநிலைமை நோக்கிச் சோம்பியிருந்து கொண்டு தன்மானத்தையும் பெரிதாய்க் கருதுவராயின், அவர் குடிகெடும். குடிசெய்வார்க்குப் பருவம் இல்லை-ஆதலால், குடிசெயல் தொண்டர்க்குக் காலவரம்பில்லை,

காலத்தை நோக்கிச் சோம்பியிருத்தலாவது, வெயில் மழை பனிக்காலங்கள் கழிந்தபின் செய்வோமென்று கடத்தி வைத்தல். தன்மானங் கருதுதலாவது, இக்குடியிலுள்ள ஏனையோரெல்லாம் இன்புற்றிருக்க நான் மட்டும் ஏன் துன்புற வேண்டுமென்று எண்ணுவதும், முன்னேற்றப் பகைவரின் கல்லடிகளையுஞ் சொல்லடிகளையும் பொறுத்துக் கொள்ளாமையுமாம். முன்பு காலமறிதல் என்னும் அதிகாரத்தில் ’’இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது’’ என்று கூறியதனால், குடிசெய்வார்க்குங் காலம் வேண்டுமோ. என்று கருதுவாரை நோக்கி, அது வேண்டியதில்லையென்று ஐயமகற்றியவாறு.