பக்கம் எண் :

இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பா னுடம்பு

 

குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு-அடிமைத்தனம், அறியாமை, வறுமை என்னும் மூவகை நிலைமையாலும் தன்குடிக்கு வருந்துன்பங்களை நீக்கப் பாடுபடும் குடிசெயல் தலைவனது உடம்பு ; இடும்பைக்கே கொள்கலங் கொல்-துன்பத்தையே இட்டு நிறைத்துவைத்தற்கு ஏற்பட்டதொரு ஏனமோ!

மூவகைத் துன்பநிலைமையாலும் முட்டுண்டு வருந்துங் குடியை முன்னேற்ற முயலுந் தலைவன், வாழ்நாள் முழுதும் அல்லும் பகலும் ஓயாது படும் மெய்வருத்தத்திற்கு அளவின்மையால், அவன் உடம்பு இடும்பையே இடும் பையோ என்று ஓர் அறிஞன் இரங்கிக் கூறியவாறு. ஏகாரம் பிரிநிலை. ’கொல்’ வினாவிடைச்சொல். ஓகாரம் இரங்கலிடைச் சொல். மறைத்தல் தடுத்தலும் நீக்குதலும். ’குற்றம்’ வகுப்பொருமை. இவ்விரு குறளாலும் குடிசெய்யும் வகை கூறப்பட்டது.