பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்-குடி

அதிகாரம் 104. உழவு

அஃதாவது அரசனுக்கும் அவனுடைய குடிகட்கும் அல்லது ஒரு நாட்டு மாந்தர்க்கெல்லாம் இன்றியமையாத உணவை விளைப்பதும், கைத்தொழிற்கும் வாணிகத்திற்கும் ஓரளவு கரணிமாயிருப்பதும், அரசியல் நடத்தற்கு வேண்டும் இறையிற் பெரும் பகுதியை நல்குவதும். குடிகளுட் சிறந்த வேளாளர் என்னும் வகுப்பார்க் குரியதும், ஆன பயிர்த்தோழில். அது உழுதலாகிய அதன் முதல் வினை பற்றி உழவு எனப்பட்டது. உழவுத் தொழிலைப் பாண்டியம் என்பது இலக்கிய வழக்கு. பாண்டி- எருது. பண்டியின் துணையாற் செய்யப்படுவது பாண்டியம். "பகடு நடந்த கூழ்" என்று நாலடியார் (2) கூறுதல் காண்க. அரசர்குடி உட்பட எல்லாக்குடிகளும் வாழ்வதற்கும் முன்னேறுவதற்கும் இன்றியமையாதாதலின், இது குடிசெயல் வகையின்பின் வைக்கப்பட்டது.

"சிறுபான்மை வாணிகர்க்கும் பெரும்பான்மை வேளாளர்க்கு முரித்தாய உழுதற்றொழில் செய்விக்குங்கால் ஏனையோர்க்கு முரித்து இது மேற்குடியுயர்தற் கேதுவென்ற ஆள்வினை வகையாதலின், குடி செயல் வகையின் பின் வைக்கப்பட்டது" என்னும் பரிமேலழகர் அதிகாரப் பாயிரம், ஆரிய முறை தழுவியதும் பொருளொடு பொருந்தாதது மாதலின், ஈண்டைக்கு ஏற்கா தென்க.

 

சுழன்றுமேர்ப் பின்ன துலக மதனா
லுழங்து முழவே தலை.

 

சுழன்றும் உலகம் ஏர்ப் பின்னது- உழவுத் தொழிலால் உண்டாகும் உடல் வருத்தம் நோக்கி வேறு பல்வகைத் தொழில்களைச் செய்து திரிந்தாலும், அதன் பின்னும் வேளாரல்லாத உலகத்தா ரெல்லாரும் உழவுத் தொழிலின் வழிப்பட்டவரே; அதனால் உழந்தும் உழவே தலை- ஆதலால், எல்லா வருத்தமுமுற்றும் உழவுத் தொழிலே உலகில் தலையாயதாம்.

பிற தொழில்களாற் பொருள் தேடிய பின்பும் , உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவின்பொருட்டு உழவரிடமே செல்ல வேண்டியிருத்தலின், 'சுழன்று மேர்ப் பின்ன துலகம்' என்றும், பிற தொழில்கள் வருத்தமின்றிச் செய்வன வேனும் கடைப்பட்டவையென்பது தோன்ற 'உழவே தலை' என்றும் கூறினார். 'ஏர்' ஆகு பெயர். 'உலகம்' வரையறுத்த ஆகுபெயர். ஏகாரம் பிரிநிலை உம்மை யிரண்டனுள், முன்னது எச்சத்தின் பாற்பட்ட பின்மை; பின்னது இழிவின் பாற்பட்ட ஒத்துக்கொள்வு.