பக்கம் எண் :

உழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை யெல்லாம் பொறுத்து.

 

உழவார் உலகத்தார்க்கு ஆணி- உழவுத் தொழிலைச் செய்வார் உலகத்தாராகிய தேர்க்கு அச்சாணியாவர்; அஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து - அத்தொழிலைச் செய்யும் வலிமையின்றிப் பிற தொழில்களை மேற்கொள்வாரை யெல்லாம் தாங்குதலால்.

தேரோட்டத்திற்கு அச்சாணி போல உலக நடப்பிற்கு உழவர் இன்றியமையாதவராதலின் 'ஆணி' யென்றார். தொழில் பற்றிய நூல் வகுப்பாருள்,உழவராகிய வேளாளரும் ஏனை வகுப்பார் போன்றே இருபிரிவார். அவர் சிறுநிலமே யுடைமையால் தாமே உழுதுண்பாரும் பெருநில முடைமையாற் பிறரைக் கொண்டு உழுவித்துண்பாரும் ஆவர். அவ்விருபிரிவாரும் முறையே கருங்களமர் அல்லது காராளர் என்றும். வெண்களமர் அல்லது வெள்ளாளர் என்றும், பெயர் பெறுவர். வேளாளர் என்பது அவ்விரு பிரிவார்க்கும் பொதுப் பெயராம். விருந்தோம்பி வேளாணமை செய்பவர் வேளாளர். 'உலகத்தார்' என்றது இங்கு உழவரல்லாதாரை. உலகத்தாரைத் தேரென்னாமையால் இங்குள்ளது ஒரு மருங் குருவகம்.

மணக்குடவ காலிங்க பரிதி பரிப்பெருமாளர் நால்வரும், 'அஃதாற்றார் தொழுவாரே யெல்லாம் பொறுத்து,' என்று பாடங்கொண்டுள்ளனர் அதற்கு "அதனைச் செய்யாதாரே (செய்யாதவர்) பிறர் பெருமிதத்தினால். செய்வன வெல்லாம் பொறுத்து தொழுதுநிற்பார்." என்பது மணக்குடவ பரிப்பெருமாளர் உரை, ஏனையிருவருரையும் இதையொத்ததே.