பக்கம் எண் :

உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூம்
விட்டேமென் பார்க்கு நிலை.

 

உழவினார் கை மடங்கின்- உழவுத்தொழிலைச் செய்வாரின் கை இதைச் செய்யாது ஓய்ந்திருக்குமாயின்; விழைவதும் விட்டேம் என்பார்க்கு நிலை இல்லை- மாந்தராற் சிறப்பாக விரும்பப்படும் பெண்ணின்பத்தையுந் துறந்தோம் என்று பெருமை கூறிக்கொள்ளும் துறவியர்க்கும், அவர் அறத்தில் நிற்பது இல்லாமற்போம்.

உழவுத் தொழில் நிகழாதாயின் உணவில்லை. உணவில்லையெனின் இல்லறம் துறவறம் ஆகிய ஈரறமும் நிகழா என்பதாம். "யாவரும் விழையுமுணவும் யாந்துறந்தே மென்பார்க்கு அவ்வறத்தின்கணிற்றலுமுளவாகா." என்றுரைப்பர் பரிமேலழகர்.உணவும் யாந்துறந்தே மென்பார்க்கு உணவின்மையால் யாதொரு.கேடுமிராதாதலின், அவ்வுரை தன்முரணா யிருத்தல் காண்க. இனி, "யாதொரு பொருளின் கண்ணும் விரும்புவதனையும் விட்டேம் என்பார்க்கு அந்நிலையின்கண் நிற்றல் இல்லை." என்னும் மணக்குடவ ருரையும், அங்ஙனமே தன் முரணாயிருத்தலாற் பொருந்தாதாம். 'விழைவதூஉம்' இன்னிசை யளபெடை. எனபார்க்கும் என்னும் எச்சவும்மை தொக்கது. இவ்வைந்து குறளாலும் உழவரது சிறப்புக் கூறப்பட்டது.