பக்கம் எண் :

செல்லான் கிழவ னிருப்பி னிலம்புலந்
தில்லாளி னூடி விடும்.

 

கிழவன் செல்லான் இருப்பின்- நிலத்திற்குரிய உழவன் நாள்தோறும் சென்று அதற்கு வேண்டியவற்றைச் செய்யாது வீட்டிற் சோம்பியிருப்பின்' நிலம், இல்லாளிற் புலந்து ஊடிவிடும்-அவன் நன்செய் அல்லது புன்செய், அவனாற் பேணப்படாத மனைவி போலத் தன்னுள்ளே வெறுத்துப் பின்பு வெளிப்படையாகச் சடைத்துக் கொள்ளும்.

செல்லுதல் ஆகுவினை; அஃதாவது சென்று கவனித்துச் செய்ய வேண்டியவற்றைச் செய்தல். அவை முற்கூறியவற்றொடு, பூச்சி புழு நோய்கட்கு மருந்து தெளித்தல், வெள்ளத்தாலுடைந்த வரப்புத்திருத்துதல், வரப்புத்திறந்து மிகை நீரை வெளியேற்றுதல், பள்ளம் விழுந்த இடங்கடக்கு மண்கொட்டுதல்,காற்றாலும் மழையாலுஞ் சாய்ந்த கதிர்களை நிமிர்த்திக் கட்டுதல் முதலியன. "உடையவன் போகா வேலை ஒருமுழங்கட்டை." யாதலால், நில முடையான் தானே செல்லவேண்டுமென்பதற்குக் 'கிழவன்' என்றார். தன்னிடத்துவந்து தன்னைப்பேணாத கணவனொடு மனைவி ஊடுவதுபோல் தன்னிடத்துவந்து நாள்தோறும் தன்னைக் கவனியாத நிலக்கிழவனொடு நிலம் ஊடிவிடும் என்றது, விளையுளின்மையால் அவன் நுக்ர்ச்சியிழத்தல் நோக்கி, 'அலகுடை நீழலவர்' என்று நெல்விளைப்போரை விதந்து கூறியமையால், 'இல்லாளி னூடிவிடும்' என்பது. மனைவி ஊடுதல் மருதநிலத்திற்குச் சிறந்ததென்னும் அகப்பொருளிலக்கணக் கொள்கையைக் குறிப்பாக வுணர்த்தும். இம்மூன்று குறளாலும் உழவுத்தொழில் செய்யும் வகை கூறப்பட்டது.