பக்கம் எண் :

தொல்வரவுந் தோலுங் கெடுக்குந் தொகையாக
நல்குர வென்னு நசை.

 

நல்குரவு என்னும் நசை- வறுமையென்று சொல்லப்படும் ஆசை; தொல்வரவும் தோலும் தொகையாகக் கெடுக்கும் தன்னைக் கொண்டவனுடைய பழைமையான குடிப்பண்பையும் அக்குடிப்புகழையும் ஒருங்கே கெடுக்கும்.

வறுமையினால் பல பொருள்கள் மேலும் ஆசையுண்டாவதானாலும், அவ்வாசை பல இழி தொழில்களைச் செய்யத் தூண்டுதலாலும், நல்குரவை நசையாக்கி அந்நசை தொல்வரவையுந் தோலையுங் கெடுக்குமென்றார். தோலைப் பரிமேலழகர் பழைய குடிவரவிற் கேற்ற சொல் என்றார். தோல் என்னும் சொல்லை.

"இழுமென் மொழியான் விழுமியது நுவலினும்
பரந்த மொழியான் அடிநிமிர்ந் தொழுகினும்
தோலென மொழிப தொன்மொழிப் புலவர்"

என்னும் தொல்காப்பிய நூற்பா (பொருள்,339) ஒருவகை வனப்பு என்னும் பனுவலின் பெயராகக் குறித்தலால், ஒருவரின் பொதுவகையான சொற்களைக் குறிக்குமாறு அதை ஆள்வது அத்துணைப் பொருத்தமாகத் தோன்றவில்லை. மேலும், அடுத்த குறள் இளிவந்தசொல்லைப் பற்றிக் கூறுதலால், அதன்கண் கூறியது கூறல் என்னும் குற்றமுந் தங்கும். ஆகவே, ஆசிரியர் குறித்த பொருள் தெளிவாகவுந் திட்பமாகவுந் தெரியாதபோது, புகழ் என்னும் பொருள்கொள்வதே பொருத்தமாம். மணக்குடவ பரிப்பெருமாளர் வடிவழகு என்னும் பொருள் கொண்டனர். பரிதியார் உடம்பு என்று கொண்டார். காலிங்கர் வலி என்றார். ’’குடிப்பிறப்பழிக்கும் விழுப்பங் கொல்லும்’’ என்னும் மணிமேகலைத் தொடர் (11:76) குடிப் பண்பும் புகழும் என்று கொள்ளவே இடந்தரும்.