பக்கம் எண் :

நல்குர வென்னு மிடும்பையுட் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.

 

நல்குரவு என்னும் இடும்பையுள்-வறுமையென்று சொல்லப்படும் ஒரு துன்பத்துள்ளே; பல் குரைத் துன்பங்கள் சென்று படும்-பல பெருந்துன்பங்கள் வந்து சேரும்.

பொருளில்லார்க் கிவ்வுலக மில்லையாதலால் வறுமையே துன்ப நிலைமையாம். நுகர்ச்சிப் பொருள்களின்மை யாகிய துன்பத்தினால், பெற்றதாயும் விரும்பாமை, மனைவியின் சுடுசொல், மக்கள் உணவின்றிப் படுந்துன்பம், வெயிற்கும் மழைக்கும் பாதுகாப்பின்மை, உறவும் நட்புமின்மை, கற்ற கல்வி பயன்படாமை, ஈயென இரத்தல், இரந்தும் பெறாமை, பெற்றும் போதாமை, ஈவாரைத் தேடியலைதல், கவலை கரைகடத்தல் முதலிய பல்வேறு பெருந்துன்பங்கள் விளைவதால், ’பல்குரைத் துன்பங்கள் சென்று படும்’ என்றார். சென்று படுதல் தாமே வந்து சேர்தல். குரை-பெருமை.

’’ஏயுங் குரையும் இசைநிறை அசைநிலை
ஆயிரண் டாகும் இயற்கைத் தென்ப ,’’


என்று தொல்காப்பியங் கூறுவதால் (சொல்,இடை,24) பரிமேலழகர் ’’குரை இசைநிறை.’’ என்றார்.