பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்-குடி

அதிகாரம் 106. இரவு

அஃதாவது, உழைக்க இயலாதவரும் களைகண் இல்லாதவருமான குருடர், கூனர், சப்பாணியர், நொண்டியர், முடவர், நோயாளியர், முதியர் முதலியோர் இரந்துண்டல். இது முன்னோர் தேட்டும் உறவினருதவியும் இல்லாத வறுமையால் நேர்தலின், நல்குரவின் பின் வைக்கப்பட்டது.

எச்சப் பிறவியரும் இறைவனாற் படைக்கப்பட்டுக் குடிகளாயிருத்தலாலும், அவரையும் நோயாளியரையும் முதியோரையும் கொல்லுதல் கொலையாதலாலும், அவருக்கு வாழ்க்கை வழி இரத்தலேயென்று அறநூலார் நெறி வகுத்துள்ளனர். இது மானந் தீரா இரவு. இது இக்காலத்தில் பின் தங்கிய நாடுகள் முன்னேறிய நாடுகளிடம் உதவிபெறுவது போல்வது.

 

இரக்க விரத்தக்கார்க் காணிற் கரப்பி
னவர்பழி தம்பழி யன்று.

 

இரத்தக்கார்க் காணின் இரக்க-இரப்போர் இரக்கத்தக்க ஈகையாளரைக் காணின் அவரிடம் இரக்க; கரப்பின் அவர்பழி தம்பழி அன்று-அவர் இல்லையென்று கரந்தாராயின், அது அவர் குற்றமே யன்றி இரந்தவர் குற்றமன்று.

பழி என்பது இழிவு என்றுமாம். இரத்தலே இழிந்ததும் துன்பந்தருவதுமாயிருத்தலின், அதன் மேலும் இழிவும் மனவருத்தமும் நேராமைப்பொருட்டு, ’இரக்க இரக்கத்தக்கார்க் காணின்’ என்றார். இரக்கத் தக்கார் வாய்திறந்து இரக்குமுன்பே குறிப்பறிந்து அன்போடு ஈயும் இயல்புடையார். அவர் ஒரு சிலரேயாதலின் ’காணின்’ என்றும், அவரிடத்தில் இரத்தல் துன்பந்தராமையின் ’இரக்க’ என்றும், அவர் கரத்தல் அருமையாதலின் ’கரப்பின்’ என்றும், அவர் கரத்தல் அவருக்கே பேரிழிவைத் தருதலின் ’அவர் பழி’ என்றும், உழைக்கும் நிலைமையில்லார் இரந்தே பிழைக்க வேண்டியிருத்தலின் ’தம்பழியன்று’ என்றும், கூறினார்.

ஈயென விரத்த லிழிந்தன் றதனெதிர்
ஈயே னென்றல் அதனினும் இழிந்தன்று.

(புறம்,204)

’இர’ முதனிலைத் தொழிற்பெயர்.
’இரத்தக்கார்’ நாலாம் வேற்றுமைத்தொகை.