பக்கம் எண் :

இன்ப மொருவற் கிரத்த லிரந்தவை
துன்ப முறாஅ வரின்.

 

இரந்தவை துன்பம் உறாவரின்-இரந்த பொருள்கள் ஈவாரது பண்பாட்டினால் வாய் திறக்கு முன்பே விரைந்து மகிழ்ச்சியோடு கிடைக்குமாயின்; ஒருவற்கு இரத்தல் இன்பம்-ஒருவனுக்கு இரத்தலும் இன்பந்தருவதாம்.

துன்பம் காலமறிந்து செல்லுதல், காத்திருத்தல், ஈவார் மன நெகிழக் கெஞ்சுதல், அவர் முகந்திரிந்து நோக்குதலும் கடுஞ்சொற் சொல்லுதலும் மறுத்தலும் முதலியவற்றால் வருவது. ’இன்பம்’ ஆகுபொருளது. ’உறா’ ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். ’உறாஅ’ இசைநிறை யளபெடை. "இரந்தவர் துன்பமுறா வரி" னென்று பாடமோதி, இரக்கப்பட்டவர் பொருளின்மை முதலியவற்றாற் றுன்புறாது எதிர்வந்தீவராயி னென்றுரைப்பாரு முளர் என்று பரிமேலழகர் கூறுவர். இதற்கு

"என்று முகம னியம்பா தவர்கண்ணுஞ்
சென்று பொருள்கொடுப்பர் தீதற்றோர்."


என்னும் நன்னெறியடிகள் மேற்கோளாம். இரத்தலும் என்னும் இழிவு சிறப்பும்மை தொக்கது.