பக்கம் எண் :

இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ள
முள்ளு ளுவப்ப துடைத்து.

 

இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின்-தம்மையவமதித்துப் பேசாதும் இழிவாகக் கருதாதும் விரும்பிய பொருளைக் கொடுப்பாரைக் கண்டால்; உள்ளம் மகிழ்ந்து உள்ளுள் உவப்பது உடைத்து-தன்மானமுள்ள இரப்போரின் உள்ளம் மகிழ்ச்சியாற் பொங்கி மேன்மேலும் உள்ளுற இன்புறுந் தன்மையதாம்.

எள்ளுதல் உள்ளத்தின் தொழில்; கருத்தளவாய் நிற்பது; இகழ்தல் வாயின் தொழில்; சொல்வடிவில் வெளிப்படுவது. புகழ்தலுக்கு எதிர் இகழ்தல். ’இகழ்ந் தெள்ளாது’ எனவே நன்கு மதித்தலும் இன்சொற் சொல்லுதலும் பெறப்படும். கரவாமையோடு இகழாமையும் சேரவே, மானமுள்ள இரப்போர்க்குப் பெருமகிழ்ச்சி விளைக்கும் என்பதாம். இவ்வாறு குறளாலும் இரக்கத்தக்காரது இயல்பு கூறப்பட்டது.