பக்கம் எண் :

இரப்பாரை யில்லாயி னீர்ங்கண்மா ஞால
மரப்பாவை சென்றுவந் தற்று.

 

இரப்பார் இல் ஆயின்-வறுமையுற்றுங் களைகண் இன்றியும் இரப்பவர் இல்லாவிடின்; ஈர்ங் கண் மாஞாலம்-குளிர்ந்த இடத்தையுடைய பெரிய மாநிலத்துள்ளார் செலவு வரவுகள்; மரப்பாவை சென்று வந்த அற்று-மரத்தினாற் செய்யப்பட்ட உயிரில்லாத பாவை தன்னை இயக்கும் பொறிக்கயிற்றாற் சென்று வந்தாற் போலும்.


"ஈத லிசைபட வாழ்த லதுவல்ல
தூதிய மில்லை யுயிர்க்கு"

(குறள்,231)

"வசையொழிய வாழ் வாரே வாழ்வா ரிசையொழிய
வாழ் வாரே வாழா வர்."

(ஷெ 240)

என்றமையால், ஈந்து புகழும் அறப்பயனும் பெறாதார் உயிருடையரல்லர் என்பதாம்.

"ஈவாருங் கொள்வாரு மில்லாத வானத்து
வாழ்வாரே வன்க ணவர்"

என்பதால் 'ஈர்ங்கண்' என்னும் சிறப்படை, ஈரமுள்ள நெஞ்சத்தையுங் குறிப்பாகவுணர்த்தி ஞாலத்தின் சிறப்பைக் காட்டும்'ஞாலம்' வரையறுத்த ஆகுபெயர். உவமத்தோடொத்த தொழில் பொருட்கு வருவிக்கப்பட்டது . ஐகாரம் அசைநிலை. இரப்பவர் என்னும் பாடம் தொடை நயம நிரம்பியதன்று. காலிங்கர் ஈன் கண்மா ஞாலம் என்று பாடமோதி, இனிது இடம் உடைத்தாகிய பெரிய உலகம் என்று பொருளுரைப்பர்.