பக்கம் எண் :

இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக வுலகியற்றி யான்.

 

உலகு இயற்றியான் இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்-இவ்வுலகத்தைப் படைத்த இறைவன் இதில் வாழ்வார்க்கு உழைத்துயிர் வாழ்தலேயன்றி இரந்துயிர்வாழ்தலையும் விரும்பி வகுத்தானாயின்; பரந்து கெடுக-அக்கொடியோனும் அவரைப்போன்றே நிலையில்லாது எங்கும் அலைந்துதிரிந்து கெடுவானாக.

அக்காலத்தில் மக்கள் தொகை மிகாது நிலவளமும் நீர்வளமும் மிக்கு எவருக்கும் அவர் விரும்பிய வேலைவாய்ப்பு எப்போதும் இருந்ததனால், உழைக்க விருப்பமுள்ள யாரும் வறுமையால் வாடவோ இரந்துண்ணவோ எள்ளளவும் ஏதுவில்லை. ஆயினும், சில மானமில்லாச் சோம்பேறிகள் இது எம் தலையெழுத்து. என்றும், அன்றெழுதினவன் அழித்தெழுதான், என்றும், சொல்லிக்கொண்டு இரப்பு வாழ்க்கையை மேற்கொண்டு, பாராத இடங்களைப் பார்த்தும் கிடையாத வுணவுகளை யுண்டும் அங்குமிங்குந் திரிந்தனர். அவரை நோக்கியே இது ஆசிரியர் கூரியதாகும். ஊணும் உடையும் ஏராளமாயிருந்ததனால், பெரும்பாலும் "பாழாய்ப் போகிறது பசுவின் வாயிலே", என்ற முறையிலேயே அக்காலத்து இரப்போர்க்கு அவ்விரண்டும் அளிக்கப்பட்டன. ஆதலால், பொருளாட்சித்துறைப்படி அதனால் கேடில்லை. ஆயினும், பண்பாட்டுத் துறைப்படி அது மாபெருங்கேடாம். அதனாலேயே ஆசிரியர் அதை அச்சோம்பேறிகள் கூற்றை யொப்புக் கொள்வதுபோல், இறைவன்மேல் வைத்து வன்மையாய்க் கண்டித்தார். ’வேண்டின்’ என்பது வேண்டாமையைத் தெளிவாகக் காட்டி நின்றது. உம்மை இழிவு சிறப்பு.

மக்கள் தொகையும் வளக்குறைவும் பொருள்முடையும் வேலையில்லாத் திண்டாட்டமும் மிக்க இக்காலத்தும், உடம்பாலும் உள்ளத்தாலும் உழைக்க விரும்பும் ஒருவனுக்குப் பொருள்பெறும் வேலை வாய்ப்பில்லையெனின், அது நாட்டையாளும் அரசின் குற்றமேயன்றி இறைவன் ஏற்பாடன்று.

"பகுத்துண்டு பல்லுயி ரோம்புத னூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை."

(குறள்,322)

என்று ஆசிரியர் அக்காலத்தே கூறிப்போந்தமை காண்க, இக்குறளால் இரவு இறைவன் ஏற்பாடன்மை கூறப்பட்டது.