பக்கம் எண் :

இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே யிடமில்லாக்
காலு மிரவொல்லாச் சால்பு.

 

இடம் இல்லாக்காலும் இரவு ஒல்லாச் சால்பு-ஒரு சிறிதும் பொருளில்லாக் காலத்தும் பிறரிடம் சென்று இரத்தலை யுடம்படாத குணநிறைவு; இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே-உலகங்களெல்லாம் ஒன்றாகக் கூடினும் அவற்றில் இட்டுவைக்கும் இடமெல்லாம் கொள்ளாத பெருமையை யுடையதாம்.

மானமும் பெருமையும் நாணும் சால்பின் உறுப்புக்களாதலின், அவை இரவை அறவே தடுக்குமென்பதாம். இடம் உலகில்வாழ இடந்தருஞ் செல்வம். இடம்-இடன், கடைப்போலி. "இடனில் பருவத்தும்" (குறள்,218) என்றமை காண்க. ஏகாரம் தேற்றம், உம்மை இழிவு சிறப்பு.