பக்கம் எண் :

ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்
கிரவி னிளிவந்த தில்.

 

ஆவிற்கு நீர் என்று இரப்பினும்-வேட்கை தணிக்கத் தண்ணீரின்றி இறக்கும் நிலைமையிலுள்ள ஓர் ஆவினுக்காக, ஒருவன் தண்ணீர் தருகவென்று அறம் நோக்கி யிரந்து கேட்கும் போதும்; நாவிற்கு இரவின் இளிவந்தது இல்-அவன் நாவிற்கு அவ்விரவைப்போல இழிவு தருவது வேறொன்றுமில்லை.

உணவை விளைக்கும் உழவுத்தொழிற்கு இன்றியமையாத துணையாகிய காளையும், தாய்ப்பாலில்லாத குழந்தையின் உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத பாலுதவும் ஆவும், தொன்று தொட்டுத் தமிழரால் மக்களைப்போற் பேணப்பட்டு வந்துள்ளன. இதற்கு, சாத்தன் சாத்தி, கொற்றன் கொற்றி, மருதன் மருதி என்னும் மக்கள் பெயர் அவற்றிற்கு இடப்பட்டு வந்ததே போதிய சான்றாம். வெட்சித் துறையான ஆதந்தோம்பலும் (தொல்,1003) இதற்குச் சான்று பகரும். பொதுவாகப் பெண்பால் மென்பாலாதலாலும், அஃறிணையுள் ஆவனாது அமைதிக்குச் சிறந்தமையாலும் பிறவினத்தினுந் தூய்மையாயிருப்பதனாலும், ஆவைக் காப்பது பேரறம் என்னும் கொள்கையெழுந்தது. ஆயினும், அதன் பொருட்டும் இரப்பது இழிவென்பது தோன்ற ’ஆவிற்கு’ என்றும். இரக்கும் பொருள் விலைகொடுத்துப் பெற வேண்டாத எளிமையதாகலின் ’நீர்’ என்றும் இரக்குஞ்செயல் அதனைச் செய்யும் உறுப்பிற்கும் இழிவென்பதுபட ’நாவிற்கு’ என்றும், இழிவுகட்குள் தலைமையான தாதலின் ’இளிவந்ததில்’ என்றும், கூறினார். இதனால் அறத்தின் பொருட்டும் இரத்தல் இழிவென்பது கூறப்பட்டது. இக்கொள்கை இன்று முற்றுந் தளர்ந்துள்ளது.