பக்கம் எண் :

கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ விரப்பவர்
சொல்லாடப் போஓ முயிர்.

 

சொல்லாட இரப்பவர் உயிர் போம்-கரப்பவர் இல்லையென்று சொல்லிய அளவிலேயே இரப்பவர்க்கு உயிர்போய்விடும்; கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்குங்கொல்-இனி, அவ்வில்லையென்னுஞ் சொல்லையே வாய்திறந்து சொன்னவர்க்கு அதனால் உயிர் போகாமலிருப்பதால், அது எப்புரைக்குட் புகுந்து ஒளிந்து நிற்குமோ! அறிகிலம்.

கேட்டாரைக் கொல்லவல்லதாகிய சொல் சொல்வாரைக்கொல்லுதல் எளிதேனும். அங்ஙனஞ் செய்யாதிருத்தல் மருட்சியைத் தருகின்றது என்பதாம். இரப்பார்க்கு உயிர்போதலாவது. இனி என் செய்வேமென் றேங்கிச் செயலறும் மனநிலை.

"புறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன்
நல்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை
ஈயாய் எனக்கென் றிரப்பானேல் அந்நிலையே
மாயானோ மாற்றி விடின்."(நாலடி,308)

’கொல்’ ஐயம், ’ஓ’ இரக்கம். ’போஒம்’ இசைநிறையளபெடை..

"வறுமையுற்றுழி மறையாது இரக்கப்படுவாராய கேளிர்கட்கும் அதனைச் சொல்லாட உயிர்போம். ஆனபின் மறைக்கப்படுவாராய பிறர்க்குச் சொல்லாடியக்காற் போகாதெங்கே யொளித்துநிற்கும் இரண்டானும் போமேயன்றோவென இரவஞ்சினா னொருவன் கூற் றாக்கி யுரைப்பாரு முளர்." என்பது பரிமேலழகர் கூற்றால் தெரியவருகின்றது.இம்மூன்று குறளாலும் இரவின் குற்றமுங் கரவின் குற்றமும் ஒருங்கே கூறப்பட்டன.