பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்-குடி

அதிகாரம் 108. கயமை.

அஃதாவது, குடிகளுள் கடைப்பட்டவரும் ஐம்பெருங் குற்றங்களையும் துணிந்து செய்பவரும் தண்டிக்கும் அரசனுக்கன்றி வேறு யார்க்கும் அஞ்சாதவருமான கீழ்மக்களின் தன்மை. அதனால், இது இறுதியிற் கூறப்பட்டது.

 

மக்களே போல்வர் கயவ ரவரன்ன
வொப்பாரி யாங்கண்ட தில்.

 

கயவர் மக்களே போல்வர்- கீழ்மக்கள் வடிவால் முற்றும் மேன்மக்களை ஒத்திருப்பர்;அவர் அன்ன ஒப்பாரியாம் கண்டது இல்- அவர் மேன்மக்களை யொத்திருத்தற் போன்ற வொப்பை வேறெந்த ஈரினத்திடையும்யாம் கண்டதில்லை.

மக்கள் என்றது மக்கட் பண்புள்ள மேலோரை.கயவரென்றது அஃதில்லாத கீழோரை. மாந்த இனத்தைச் சேர்ந்த இவ்விரு வகுப்பாரும் இருவேறினம் போன்றே ஆசிரியராற் கொள்ளப்பட்டிருப்பதை வேறிடத்துங் காண்க. (குறள்.410,420).அறிவிவிலிகளான கல்லா மாந்தரும் கயவரான பொல்லா மாந்தரும் மாக்கள் எனப்படுவர்.அறிவும் ஒழுக்கமும் ஒருங்குடையாரே மக்கள் எனப்பெறுவர், மக்களும் மாக்களுமாகிய இருமாந்த வகுப்பாரும் பண்புண்மையின்மையாலன்றி வடிவால்மட்டும் வேறுபாடறியப் படாமையின். அவரவர் தன்மையறிந்து மக்களென உறவாடுவதும் விலங்கெனப் பயன்படுத்துவதுஞ் செய்க என்பதாம்.

இனி, இக்குறட்கு, கயவர் மக்களைவடிவால் ஒப்பர். ஆனால், கயவரை வடிவாலும் குணத்தாலும் ஒப்பார் பிறரில்லை யென்றும் உரைப்பர்.

அவர் என்றது அவரிடைப்பட்ட ஒப்புமையை.ஏகாரம் தேற்றம்.ஒப்பாரி ஒப்பு. 'ஆரி' ஓர் ஈறு.இனி,

'
"தன்னொழி மெய்ம்முன் யவ்வரின் இகரந்
துன்னு மென்று துணிநரும் உளரே".


என்று பவணந்தியார் (206) கூறியுள்ளவாறு, ஒப்பார்+ யாம்= ஒப்பாரியாம் என்று புணர்ப்பினுமாம்.