பக்கம் எண் :

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவல மிலர்.

 

நன்று அறிவாரின் கயவர் கயவர் திரு உடையார்- தமக்கும் பிறர்க்கும் நன்மையானவற்றை யறியும் மேன்மக்களினும் அவற்றை யறியாத கீழ்மக்கள் பேறுபெற்றவராவர்; நெஞ்சத்து அவலம் இலர்-எங்ஙனமெனின் அவை பற்றி அவர்போலத் தம் நெஞ்சத்திற் கவலைப்பட்டுவருந்துவதில்லை.

இளமை,உடல்நலம் முதலியவற்றின் நிலையாமையுணர்ந்து இம்மையில் எய்ப்பில் வைப்பிற்கும்,பிறப்பின் இயல்பறிந்து மறுமையில் நற்பண்பு விண்ணின்ப வீடுகட்கும், ஏற்ற முயற்சி செய்வது தமக்கும்; மக்களின் வறுமை பசி பிணி பஞ்சம் முதலியவற்றை நீக்கவுந் தடுக்கவும் திட்டங்கள் வகுத்து அவற்றை நிறைவேற்றுவதும், வேற்றரசாலும் வேற்றினத்தாலும் நாட்டு மொழி, கலை, நாகரிகம், பண்பாடு முதலியவற்றிற்குக் கேடும், நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையும், நேரும்போது கிளர்ச்சி செய்து அவற்றைத் தடுப்பதும், தம்மொடு பிறர்க்கும்; செய்யும் நன்றுகளாம்.இவை பற்றிய கவலையும் முயற்சியும் உழைப்பும், வருத்தமும் இழப்பும் கயவருக்கின்மையால் ,'திரு உடையார்' என்றார். இக்குறளணி வஞ்சகப்புகழ்ச்சி. 'நன்று' வகுப்பொருமை.