பக்கம் எண் :

அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான்.

 

தாம் கேட்ட மறை உய்த்துப் பிறர்க்கு உரைக்கலான் - தாம் தம் காதாற்கேட்ட மருமச் செய்திகளைக் கொண்டுசென்று பிறர்க்கெல்லாஞ் சொல்லுதலால்; கயவர் அறை பறை அன்னர் - கீழ்மக்கள் விளம்பரஞ் செய்தற்குக் கொட்டப்படும் பேரிகையொப்பர்.

வெளிப்படிற் குற்றமாகுமென்று ஒருவன் மறைத்துச்சொன்ன செய்தி மறை. மறைக்கப்பட்டவர் ' பிறர் '. உய்த்தல் பொறையை ஏற்றிக் கடத்துதல். கீழ்மக்கட்கு மருமச் செய்திகளைப் பிறர்க்குச் சொல்லும்வரை அவற்றை உள்ளத்திற் கொண்டிருத்தல் ஒருபொறை (பாரம்) போலத் தோன்றுதலால், ' உய்த்து ' என்றார்.

'பறையன்னர் ' என்றாரேனும், பறையறைந்து சொல்லுதலையே குறித்தலால் இது வினையுவமை. இக்குறளால் கயவர்க்கு மறையடக்க மின்மை கூறப்பட்டது.