பக்கம் எண் :

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோற்
கொல்லப், பயன்படும்கீழ்.

 

சான்றோர் சொல்லப் பயன்படுவர் - மேன்மக்கள் வலியாரும் மெலியாரும் சென்று தமக்கு வேண்டிய தொன்றைக் கேட்டவளவிற் கொடுத்துதவுவர்; கீழ் கரும்பு போல் கொல்லப் பயன்படும் - ஆனால், கீழ்மக்களோ; வலியார் சென்று கரும்பை ஆலையில் வைத்து நெறித்துப் பிழிந்தாற்போல, வருத்தி நெருக்கிய போதே ஒன்றை வருந்தித் கொடுப்பர்.

கீழ் மக்களின் இழிவு விளங்கித் தோன்றுமாறு மேன்மக்கள் இயல்பும் உடன் கூறினார். இது வேற்றுமையணி. 'கீழ்' ஆகுபெயர்.வலியாரும் வருத்தினாலன்றிக் கயவர் கொடார் என்பது இக்குறளாற் கூறப்பட்டது.