பக்கம் எண் :

உடுப்பதூஉ முண்பதூஉங் காணிற் பிறர்மேல்
வடுக்காண வற்றாகுங் கீழ்.

 

உடுப்பதும் உண்பதும் கீழ் காணின் - பிறர்தம் செல்வத்தின் பயனாக ஓவியப்பூம் பட்டாடையணிதலையும் அறுசுவை நெய்யுண்டி யுண்டலையும் கீழ்மகன் காணுமாயின்; பிறர்மேல் வடுக்காண வற்று ஆகும் - அவற்றைப் பொறாது அவரிடத்துக் குற்றமில்லாதிருக்கவும் ஒரு குற்றத்தைப் படைத்துக்கூறவல்லவனாம்.

'உடுப்பது' , 'உண்பது' தொழிற்பெயர்கள்.இவற்றைத் தலைமை பற்றிக் கூறியமையால், அணிதல், பூணுதல்,பருகுதல், ஊர்தல் முதலிய பிற செல்வவினைகளுங் கொள்ளப்படும். கண்டவளவிற் பொறாமை கொள்ளுதலால் 'காணின்' என்றும், பொருந்தப் பொய்த்தல் வல்லமை தோன்ற 'வற்றாகும்' என்றும், கூறினார்.வல்லது- வற்று(வல்+து), 'உடுப்பதூஉம்', 'உண்பதூஉம்' இன்னிசையளபெடைகள். 'கீழ்' ஆகுபெயர். இக்குறளால் கீழ்மகன் பிறர் செல்வங் கண்டு பொறாமைப் படுதல் கூறப்பட்டது.