பக்கம் எண் :

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவர
னோக்கமிம் மூன்று முடைத்து.

 

இதுவுமது

கூற்றமோ - என்னைக் கொல்வதுபோல வருத்துவதாற் காலனோ; பிணையோ - இடையிடை மருண்டு பார்ப்பதாற் பெண்மானோ; கண்ணோ - இவ்விரு தன்மையும் இல்லாது சில வேளைகளிலிருப்பதால் இயல்பான மாந்தக்கண்தானோ; மடவரல் நோக்கம் இம்மூன்றும் உடைத்து - இப்பெண்ணின் பார்வை இம்மூவகைத் தன்மையும் உடையதாயிருக்கின்றது.

மேற்கூறிய கொல்லுத் தன்மையோடு வேறிரு தன்மைகளும் உடைமை இங்குக் கூறப்பட்டது. 'கூற்றம்' 'கண்' 'பிணை' என்னும் மூன்றும் ஆகு பொருளன. 'மடவரல்' ஆகுபெயர். இதில் வந்துள்ள அணி ஐயவுவமை.