பக்கம் எண் :

கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கங் காமத்திற்
செம்பாக மன்று பெரிது.

 

(இதுவுமது)

கண் களவு கொள்ளும் சிறுநோக்கம்- இவள் கண்கள் எனக்குத் தெரியாமல் என்னை மறைவாகப் பார்க்கும் இடுகிய பார்வை ; காமத்தில் செம்பாகம் அன்று பெரிது- மெய்யுறு புணர்ச்சியில் சரிபாதியன்று, அதற்கும் மேற்பட்டதாம்.

தான் நோக்குங்கால் கவிழ்ந்து நிலம் நோக்கியும் தான் நோக்காக்கால் தன்னை நேர் நோக்கியும் வருதலாற் 'களவு கொள்ளும்' என்றும் தன்னை நோக்குவது இடுகியும் நேரங்குறுகியுமிருத்தலால் 'சிறுநோக்கம்' என்றும், அச்சிறுநோக்கம் தன்மேற் காதலை யுணர்த்துதலால் இனிப் புணர்தலுறுதிபற்றிச் 'செம்பாகமன்று பெரிது' என்றுங் கூறினான்.