பக்கம் எண் :

உறாஅ தவர்போற் சொலினுஞ் செறாஅர்சொ
லொல்லை யுணரப் படும்.

 

(தோழி சேட்படுத்தியவழி அவள் குறிப்பறிந்த தலைவன் தன்னுள்ளே சொல்லியது.)

உறாதவர் போல் சொலினும் - புறத்தில் அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாராயினும்; செறார் சொல் ஒல்லை உணரப்படும் - அகத்திற் பகையில்லாதவர் சொல் பின்பயன் படுதல் குறைவேண்டியவரால் விரைந் தறியப்படும்.

சேட்படுத்தலாவது, தலைமகன் தலைமகள் ஆகிய இருவரின் காதல் நிலைமைகளையும் முற்றுந் தெளிவாக அறிதற் பொருட்டும், தலைமகளை அருமைப்படுத்தற் பொருட்டும், தோழி தலைமகனை நெருங்க வொட்டாது சில நாள் நீக்கிவைத்தல். அங்ஙனம் சேட்படுக்கும்போது, எம் உறவினர் கடுங்கண் மறவர் என்றும், இவ்விடம்காவன் மிகுதி யுடைமையால் வரத்தகாது என்றும் அன்பிலாதவள் போலக் கடுஞ்சொற்களைச் சொல்லுதல் மரபு. ஆயினும், தலைமகன் அறிவுடையனாதலின், அத்தகைய சொற்களால் தளராது, தன் குறை முடிக்கக் கருதியே சேட்படுக்கின்றமை குறிப்பாலறிந்து, உலகியல்மேல் வைத்துக் கூறியதாகும் இக்குறட் கூற்று. இது வருகின்ற குறட்கும் ஒக்கும். 'செறார்' எனவே அன்புடைமை பெறப்படும். 'உறாஅ(தவர்),'செறா அர்' என்பன இசைநிறை யளபெடைகள். 'போல்' என்பது உண்மையில் உறாதவரன்மையைக் காட்டும். உம்மை எதிர்மறை.