பக்கம் எண் :

அசையியற் குண்டாண்டோ ரேஎர்யா னோக்கப்
பசையினள் பைய நகும்.

 

(தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு தலைமகன் கூறியது.)

யான் நோக்கப் பசையினள் பைய நகும் - தோழி என்னைச் சேட்படுத்துரைக்குஞ் சொற்காற்றாது யான் இரங்கி நோக்கியவிடத்து, அஃதறிந்து அன்பால் நெகிழ்ந்து மெல்ல நகுவாள்; அசையியற்கு ஆண்டு ஓர் ஏர் உண்டு - ஆதலால், அசையும் மெல்லியலாளாகிய என் காதலிக்கு அந்நகையின்கண் ஓர் அழகிய குறிப்புள்ளது.

அக்குறிப்பால் என் வேணவா நிறைவேறும் என்று மகிழ்ந்தான் என்பதாம். 'அசையியல்' அன்மொழித்தொகை. 'ஏஎர்' இசைநிறையளபெடை. 'ஏர்' ஆகுபெயர்.